8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
26. கோயில்
262. | தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத் தேறிய அந்தணர் சிந்தை செய்யும் எல்லிய தாகிய எழில்கொள் சோதி என்னுயிர் காவல்கொண் டிருந்த எந்தாய்; பல்லையார் பசுந்தலை யோடிடறிப் பாதமென் மலரடி நோவ நீபோய் அல்லினில் அருநட மாடில் எங்கள் ஆருயிர் காவல் இங் கரிது தானே. (6) |
262, ’’தேவதேவை’’ என்றதும், முன் திருப்பாட்டில், ‘‘சடையினானை’’ என்றதுபோன்ற வழுவமைதி, தேறிய அந்தணர்-தெளிந்த அந்தணர்கள்; என்றது, ‘ஞானத்திற் சிறந்தஅந்தணர்’ என்றவாறு. எல்லை-இடம்; என்றது சிற்றம் பலத்தை. ‘‘எல்லையது’’ என்றதில் உள்ள அது, பகுதிப் பொருள் விகுதி. ‘எல்லையதன்கண்’ என ஏழனுருபு விரிக்க. ஆகிய-பொருந்திய. காவல் கொண்டு-காத்து. பல்லைப் பொருந்திய பசுந்தலை, இடுகாட்டுள் நரி முதலியவற்றால் இழக்கப்பட்டுக் கிடப்பன பல் தோன்றக் கிடத்தலை, ‘‘பல்லை ஆர்’’ என்றார், ‘பாதம் அவற்றோடு இடறுதலால் அம்மலரடி நோவ’ என்க. அல்லினில்-இருளில். ஆடில்-ஆடினால், ஆருயிர் காவல்-ஆருயிரை யாங்கள் காத்தல். அரிது-இயலாது. ‘ஆதலின், இனி அதனை ஒழிக’ என்பது குறிப்பெச்சம். |