சேந்தனார் திருப்பல்லாண்டு
29. கோயில்
290. | மிண்டு மனத்தவர் போமின்கள்; மெய்யடியார்கள் விரைந்து வம்மின்; கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட் செய்மின் குழாம்புகுந் தண்டங்கடந்த பொருள் அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே (2) |
290. மிண்டு மனம்-திணிந்த மனம்; உருகாத மனம். ‘மனத்தவராயினார், அடியார்களாயினார்’ என இரண்டிடத்தும் ஆக்கச்சொல் வருவிக்க. ‘‘போமின்கள்’’ என்றது, அவர் இசையார் என்பதுபற்றி, ‘‘ஈசற்கு’’ எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ‘‘கொண்டும் கொடுத்தும்’’ என்றார். ஈசன் |
பால் கொள்ளுதல் அவனது திருவருளையும், அவனுக்குக் கொடுத்தல் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஆம். ‘‘குடி குடி’’ என்றது. ‘குடிதோறும்’ என்னும் பொருட்டாய், ‘எல்லாக் குடியிலும்’ எனப் பொருள் தந்தது. மெய்யடியாராய் உள்ளார் செய்யத்தக்கது இதுவே என்றபடி. குழாம் புகுந்து-கூட்டமாகத் திருவம்பலத்திற் சென்று. ‘புகுந்து கூறுதும்’ என முடிக்க. என்று-என்று புகழ்ந்து சொல்லி. அவற்குப் பல்லாண்டு கூறுதும்’ எனச் சுட்டுப்பெயர் வருவிக்க. ‘‘ஆட்செய்மின்’’ என முன்னிலையாக வேறுபடுத்துக் கூறியது, ‘எம்மொடு குழாம் புகுந்து பல்லாண்டு கூறுதல் நுமக்குங் கடப்பாடாதலின்’ எனக் காரணங்கூறி வலியுறுத்தற் பொருட்டு. இதன் முதலடியும், ஈற்றடியும் ஒரோவொருசீர் மிக்கு வந்தன. |