சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

3. கோயில்


28.

‘வண்டார் குழல்உமை நங்கை முன்னே
   மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்
கண்டார் கவலவில் லாடி வேடர்
   கடிநா யுடன்கை வளைந்தாய்! ’என்னும்;
‘பண்டாய மலரயன், தக்கன், எச்சன்,
   பகலோன் தலை, பல், ப சுங்கண்
கொண்டாய்! ’ என் னும்; ‘குணக் குன்றே! ’ என்னும்;
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.           (6)
 

28.     தேவியும் வேடிச்சி கோலங்கொண்டு உடன் சென்றமையின்,
‘அவள்  முன்னே’  என்றார்,  ‘‘மகேந்திரம்’’ ` என்பது இங்கு கயிலாய
மலையைக்  குறித்து  நிற்றல்  நோக்கத்தக்கது.   மேலவற்றோடு ஒப்ப
வருதற்பொருட்டு,    இங்கு,    கயிலையை    ‘மகேந்திரம்’    எனப்
பொதுவகையாற்   கூறிப்போந்தார்  எனினுமாம்.  ‘‘கண்டார்’‘  என்றது
அன்பரை;   என்னை,   இறைவனது  எளிவந்த  செயலை   நோக்கிக்
கவலுதற்குரியார்  அவரேயாகலின்,  ‘‘கதுவாய்த்  தலையிற்   பலிநீ
கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே? ’’
   (திருமுறை- 7, 4 1.1.)
என்பது    முதலிய    திருமொழிகளைக்    காண்க.  கவல -வருந்த.
வில்லாடுதல்-விற்றொழில்  புரிதல்.  வேடர் நாய்-வேட்டைக்கு உரியது.
கடி  நாய்-விரைவுடைய  நாய்.  கை  வளைந்தாய்-பல  பக்கங்களிலும்
சுற்றினாய். ‘வில்லாடிக் கைவளைந்தாய்’ என்று இயைத்து,  ‘விற்றொழில்
செய்தலால்  கைகள்  செயற்படப்  பெற்றவனே’  என்று  உரைப்பினும்
ஆம்.  ஆய-தக்கன்  வேள்விக்குச்சென்ற.  தக்கன்   வேள்வியில் பல்
உகுக்கப்பட்டவன்.     ‘பூடா’     என்னும்     பகலவனும்,    கண்
பறிக்கப்பட்டவன்.  ‘பகன்’ என்னும் பகலவனும் ஆதலின்,  ‘பகலோன்’
என்பதைத் தனித்தனி கூட்டுக. இத்திருப்பாட்டின்  மூன்றாம்  அடியுள்,
‘பகலோன்   அனல்   பகற்பற்பசுங்கண்’  என்பது  பாடம்  ஆகாமை
அறிந்து கொள்க.  


மேல்