சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

5. திருவீழிமிழலை


48.

மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த
   மருந்தை, என் மாறிலா மணியைப்,
பண்டலர் அயன்மாற் கரிதுமாய், அடியார்க்
   கெளியதோர் பவளமால் வரையை,
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
   திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக்
   குறுகவல் வினைகுறு காவே.                    (3)
 

48.  மண்டலம்-ஞாயிற்றின்   வட்டம்,   அதன்  ஒளியை விலக்கி
நுகர்தலாவது,   ஞாயிற்றின்   ஒளியிலே     மயங்கி     அதனையே

வணங்கியொழியாது.      அதன்    நடுவில்    எழுந்தருளியிருக்கும்
சிவமூர்த்தியை வணங்கி மகிழ்தல். மருந்து-அமுதம். மாறு- கேடு. அலர்
அயன்-   மலரின்கண்   உள்ள  பிரமன்.  ‘அயன்மாற்கு   அரியதும்,
அடியார்க்கு   எளியதும்   ஆயதோர்   பவளமால்  வரை’  என்றது
இல்பொருளுவமை.    ‘‘அரிது   மாய்’’   என்ற   உம்மை,   எச்சம்,
மலர்வாய்-மலரின்கண்  பொருந்திய.  வேரி-தேன்.  வார்- ஒழுகுகின்ற.
குரு மணி-ஆசிரியருள் தலைவன்.  


மேல்