2. சேந்தனார் திருவிசைப்பா
7. திருவிடைக்கழி
73. | குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை படுமிடர் குறிக்கொளா தழகோ மணமணி மறையோர் வானவர் வையம் உய்யமற் றடியனேன் வாழத் திணமணி மாடத் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன் கணபதி பின்னிளங் கிளையே. (5) |
73. குண மணிக் குருளை-நற்பண்பினையுடைய சிறந்த வீரமுடைய சிறுவன்; முருகன். ‘‘குருளை’’ என்றது சிங்கக் குட்டியை. இஃது உவம ஆகுபெயராய், அதுபோலும் சிறு வனைக் குறித்தது. ‘குறிக்கொளாதது என்பது குறைந்து நின்றது. மணம் அணி மறையோர்- மங்கல விழாக்களை அழகு படுத்துகின்ற அந்தணர். மறையோரை வையத்தாரினின்று வேறு பிரித்தது, சிறப்புப் பற்றி. ‘வாழ நின்ற’ என இயையும். ‘திண்ணம்’ என்பது இடைக்குறைந்து, ‘‘திணம்’’ என வந்தது, ‘திண்மையாகிய மாடம்’ என்க. கண மணி-கூட்டமாகிய இரத்தினங்களையுடைய. இளங்கிளை - தம்பி. |