6. வேணாட்டடிகள் திருவிசைப்பா
21. கோயில்
208. | ஆயாத சமயங்கள் அவரவர்கண் முன்பென்னை நோயோடு பிணிநலிய இருக்கின்ற அதனாலே பேயாஇத் தொழும்பனைத்தம் பிரான்இகழும் [என்பித்தாய் நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. (4) |
208. ‘என்னை நோயோடு பிணி நலிய, (நான் ஏதும் செயலின்றி) இருக்கின்ற அதனாலே, நாயேனை ஆயாத சமயங்கள் அவரவர் முன்பு என்பித்தாய்’ எனக் கூட்டி யுரைக்க. ஆயாத சமயங்கள்-உண்மையை ஓர்ந்துணர மாட்டாது மயங்கி உரைக்கின்ற சமயங்கள். ‘‘ஆயாதன சமயம்பல’’எனத் திருஞான சம்பந்தர் அருளிச் செய்தமை காண்க. (திருமுறை-1.11.5). ‘சமயங்களை யுடைய அவரவர்’ என்க. நோய்-மனக் கவலை. பிணி-உடற்பிணி. நலிய-வருத்த, ‘பேயாக’ என்பது ஈறு குறைந்தது. ‘பேய்போல அலையும்படி’ என்பது பொருள். தொழும்பன்-அடியவன். தம்பிரான்-தமக்குத் தலைவன். ‘‘தாம்’’ என்றது, இவர்போலும் அடியவர் பிறரையும் உளப்படுத்தது. ‘தம் பிரான் இகழும்’ என்றல், ‘இல்லாதவனை உளனாகக் கருதியும், தன்னைக் காக்கமாட்டாதவனை மாட்டுவான் எனக் கருதியும் அல்லல் உறுகின்றான்’ என்னும் இருவகைக் கருத்தையும் தோற்றுவிப்பது.‘‘என்போலிகள் உம்மை இனித்தெளியார்அடியார்படுவது இதுவேயாகில்’’ என்று அருளினார் திருநாவுக்கரசு நாயனாரும் (திருமுறை.4.1.9.). ‘‘என்பித்தாய்’’ என்பது, ‘என்று பொது மக்களால் இகழ்வித்தாய்’ எனப் பொருள்தந்து, ‘நாயேனை’’ என்னும் இரண்டாவதற்கும், ‘‘முன்பு’’ என்பதற்கும் முடிபாயிற்று. ‘ஏத மேபல பேச நீஎனை ஏதிலார்முனம் என்செய்நாய்’’ என்றார் திருவாசகத்தும். (திருக்கழுக்-6.). |