சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

4. கோயில்


39.

திசைக்குமிக் குலவு கீர்த்தித்
   தில்லைக்கூத் துகந்து தீய
நசிக்கவெண் ணீற தாடும்
   நமர்களை நணுகா நாய்கள்
அசிக்கஆ ரியங்கள் ஓதும்
   ஆதரைப், பேத வாதப்
பிசுக்கரைக் காணா கண்; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                     (5)
 

39.     திசைக்கு மிக்கு-திசையினும் பெரிதாகி. உகந்து -விரும்பிக்
கண்டு.  தீய  நசிக்க-தீவினைகள்  கெட்டொழியுமாறு.  ‘‘வெண்ணீறது’’
என்றதில்  அது,  பகுதிப்பொருள்  விகுதி. ஆடும்- மூழ்குகின்ற.‘ஆடி’
எனவும்    பாடம்   ஓதுவர்.   நமர்கள்- நம்மவர்:   சிவனடியார்கள்.
‘நாய்களாகிய,  என்க.  அசிக்க-பிறர் நகைக்கும்படி. நகைத்தல், ஆரிய
மொழியின்  ஒலிகள் பற்றியாம். ‘அவரது ஆரிய ஓத்துப் பொருளற்றது’
என்றபடி.    ஆதர்-அறிவிலிகள்.    பேத   வாதம்- உயர்ந்தவரோடு
மாறுபட்டுப்   பேசும்   பேச்சு.  பிசுக்கர்- வலிமையற்றவர்;  உயிர்க்கு
உறுதியாவதே  வலிமை  என்க. வலிமை கெட்டு மெலிதலை ‘பிசுத்தல்,
பிசுபிசுத்தல்’   என்ப.   இதனுட்   குறிக்கப்பட்டவர்கள்  மீமாஞ்சகர்,
சாங்கியர், பாஞ்சராத்திரிகள் முதலியோர்.


மேல்