3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
13. கங்கைகொண்ட சோளேச்சரம்
138. | அண்டம்ஓர் அணுவாம் பெருமைகொண் டணுஓர் அண்டமாம் சிறுமைகொண் டடியேன் உண்டவூண் உனக்காம் வகையென துள்ளம் உள்கலந் தெழுபரஞ் சோதி ! கொண்டநாண் பாம்பாப் பெருவரை வில்லிற் குறுகலர் புரங்கள்மூன் றெரித்த கண்டனே ! நீல கண்டனே ! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே. (6) |
138. ‘‘கொண்டு’’ என வந்தவை இரண்டும் வினைச் செவ்வெண். இம் முதலடியின் பொருளை, ‘‘அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்க ளெல்லாம்-அண்டங்க ளாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்’’ எனப் பின் வந்தோர் கூறியவாறு அறிக (பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணம்-கடவுள் வாழ்த்து). உண்ட ஊண்நுகர்ந்த-பிராரத்த வினை. ‘அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நிற்’பார்க்கு (சிவஞான போதம்-சூ.12) வரும் பிராரத்த வினை அவருக்கு ஆகாதவாறு, ‘இவனுக்குச் செய்தது எனக்குச் செய்தது என்று உடனாய் நின்று ஏற்றுக் கொள்ளுதல்’ (சிவஞான சித்தி-சூ.10-1.) பற்றி, ‘‘அடியேன் உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள்கலந்து’’ என்றார். இறைபணியில் நிற்பவர் தமக்கு வருவன பலவற்றையும் ’சிவார்ப்பணம்’ எனக்கொள்ளுதல், பிராரத்தம் தாக்காமைப் பொருட்டேயாம். உண்ணும் உணவையும் சிவனுக்குச் செய்யும் ஆகுதியாக நினைத்துச் செய்தலும் மரபாதலின், இத்தொடர், அதனையும் குறித்தல் பொருந்துவதாகும். ‘‘பரஞ்சோதி’’ என்றதன் பின்னர், ‘நீயே’ என்னும் பயனிலை வருவிக்க, இதனால், சிவபெருமானது முழுமுதற்றன்மை கூறியவாறாம். ‘பாம்பாம்’ எனப் பாடம் ஓதுதலால் ஒரு சிறப்பின்மை அறிக. கண்டன்-வீரன். |