3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
17. திருவிடைமருதூர்
173. | வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய வீங்கிருள் நடுநல்யா மத்தோர் பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் ஐயசெம் பொன்தோட் டவிர்சடை மொழுப்பின் அழிவழ கியதிரு நீற்று மையசெங் கண்டத் தண்டவா னவர்கோன் மருவிடந் திருவிடை மருதே. (1) |
173. முதலடியை இறுதியடியின்முன் கூட்டுக. ‘ஓர் பாந்தள்’ என இயையும். பைய-படத்தை யுடைய. பாந்தள்-பாம்பு. உமிழ்ந்து-உமிழ்தலால்; இது, ‘‘காதல் செய்’’ என்பதனோடு முடியும். ‘சிவபெருமானது திருச்செவியில் செம்பொன் தோடேயன்றிப் பாம்பும் குழைபோல உள்ளது’ என்க. ஐய-அழகிய. மொழுப்பு-முடி. ‘மொழுப்பினால் அழிகின்ற அழகிய திருநீறு’ என்க. திருநீறு அழிதற்குக் காரணம் முன்னே (பாட்டு-170) கூறப்பட்டது. வெய்ய செஞ்சோதி மண்டலம்-ஞாயிற்று மண்டலம். ‘ஞாயிற்று மண்டலம் விளங்க அதனிடையே மிக்க இருளையுடைய நள்ளிரவும் உள்ளது போலத் தோன்றுகின்ற கரிய நிறத்தை ஒருபுடைகொண்ட சிவந்த கழுத்து’ என்க. மைய-கருநிறத்தையுடைய. ‘செம்பொற்றோட்டையும், அழகிய திருநீற்றையும், செங்கண்டத்தையும் உடைய கோன்’ என்க. |