295. சீர்-செம்மை; சிவநெறி ஒழுக்கம். திரு-திருவருள். பொலிய-என்னிடத்து நிலைபெற்று விளங்கும்படி. ‘சேவடிக்கீழ் நின்று’ என ஒரு சொல் வருவிக்க. நிற்றல்-பணிசெய்தல். ‘‘பெறாத’’ என்றது, ‘பெறுதற்கரிய’ என்றவாறு. பெறுதற்கரிய அறிவாவது, ‘யாவரையும், யாவற்றையும் உடையவன் சிவபெருமானே’ என அறியும் அறிவு. ‘அவ்வறிவாற்பெற்றது எனக் காரணம் வருவித்து, ‘‘பெற்றது’’ என்றதற்கு, ‘பெற்றபயன் என உரைக்க. அங்ஙனம் உரையாவிடில், ‘‘ஆரும்பெறாத அறிவு’ என்றதன் பொருளே பொருளாய்ச் சிறப்பின்றாம். பயன்,சிவானந்தம். ஆர் - அவ்வறிவைப் பெறாத எவர். ‘அத்தகைய பயனை நீவிரும் பெற்றீராதலின். நாம் அனைவரும் கூடிப் பல்லாண்டு கூறுவோம்’ என இயைபுபடுத்துரைக்க. ஊர்-வாழும் ஊர். கழற-எடுத்துச் சொல்லும்படி; இதற்கும் செயப்படுபொருள் இனி வருகின்ற ‘‘ஆள்’’ என்பதே. அதனால், ‘‘உமை மணவாளனுக்கு ஆள்’’ என்பதை, ‘‘உலகில்’’ என்றதன் பின்னே வைத்து உரைக்க. உழறி-அவன் புகழைப்பிதற்றி. ‘பிதற்றி’ என்றார். முற்ற அறியாது அறிந்தவாறே கூறலின். இதனை, ‘‘நாம்’’என்பதன் பின்னர்க் கூட்டுக. ஆள்-நாம் ஆளான தன்மையை, ‘‘கழற’’ எனவும், ‘‘அறியும் பரிசு’’ எனவும் வேறு வேறு முடிபு கொள்ளுதலால், ‘‘பாரும்’’ என்றது, கூறியது கூறல் ஆகாமை அறிக. பரிசு-தன்மை. ‘பரிசினால்’ என மூன்றாவது விரிக்க. |