3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
11. திருமுகத்தலை
| 112. 
 | புவனநா யகனே ! அகவுயிர்க் கமுதே ! பூரணா ! ஆரணம் பொழியும்
 பவளவாய் மணியே ! பணிசெய்வார்க் கிரங்கும்
 பசுபதீ ! பன்னகா பரணா !
 அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன்
 அகத்திலும் முகத்தலை மூதூர்த்
 தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
 தனியனேன் தனிமைநீங் குதற்கே.                         (1)
 
 | 
| 
 112.     புவனம்-உலகம் ; இவ்வஃறிணை இயற்பெயர்         பன்மைப்பொருட்டாய், ‘எல்லா உலகங்கட்கும், எனப் பொருள் தந்தது. இவ்வாறு
 வருவதனை, ‘சாதியொருமை’ என்ப. அகம்-இடம்; அக      உயிர் -உன்னை
 அடைந்த   உயிர்கள்;   முத்தான்மாக்கள்,  ‘அவனிக்கு’  என  உருபு
 விரித்து,  உலகிற்கு  இருளை  நீக்கி ஒளியைத் தரும்      ஞாயிறுபோன்று
 மருளை  நீக்கி  அருளை வழங்கி, என உரைக்க.       பசுபதி-உயிர்கட்குத்
 தலைவன். பன்னக ஆபரணன்- பாம்பாகிய      அணிகளை   யுடையவன ;
 தனியனேன்  -  துணை  இல்லாதேன். தனிமை      நீங்குதற்கு- அந்நிலை
 நீங்குமாறு ; என்றது, யான் துணை பெற்று உய்யும்படி’      என்றவாறு.
 |