8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
26. கோயில்
| 261. | அரும்புனல் அலமரும்      சடையினானைஅமரர்கள் அடிபணிந் தரற்ற அந்நாள்
 பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை
 பேசவும்      நையும்என் பேதை நெஞ்சம்
 கருந்தட மலர்புரை கண்ட வண்டார்
 காரிகை      யார்முன்பென் பெண்மை தோற்றேன்
 திருந்திய      மலரடி நசையி னாலே
 தில்லையம்      பலத்தெங்கள் தேவ தேவே.               (5)
 
 | 
| 
 261.      ’’சடையினானை’’என்றது, ‘சடையை உடையவனாகிய நின்னை’என,  முன்னிலைக்கண்  படர்க்கை  வந்த  வழுவமைதி.  சிலை-வில்.
 வார்த்தை-  (வீரச்)  செய்தி.  ‘‘பேசவும்’’  என்ற  உம்மை,  ‘பேசுதல்
 ஒன்றையே   பிறர்   செய்யவும்,   எனப்பொருள்   தந்து   நின்றது,
 நையும்      -(அதனைக் கேட்ட அளவிலே) நெகிழ்ந்துருகும்.கருந்      தடமலர்
 - கரிய நீர்ப் பூ; நீலோற் பலம். கண்ட - கண்டத்தை        உடையவனே.
 வண் தார்-வளப்பமான   மாலையை  அணிந்த.    ‘தார்’        என்பது
 இங்குப்   பொதுமையில் நின்றது காரிகையார்-பெண்கள்.   ‘அவர்கள்
 முன்பு’   என்றது, ‘அவர்கள் நகைக்கும்படி’  என்றதாம். பெண்மை -
 பெண் தன்மை; நாணம், நசை - விருப்பம். ‘நசையினாலே தோற்றேன்’
 என முன்னர்க் கூட்டுக.
 |