சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்


101.தளிரொளி மணிப்பூம் பதம்சிலம் பலம்பச்
   சடைவிரித் தலையெறி கங்கைத்
தெளிரொளி மணிநீர்த் திவலைமுத் தரும்பித்
   திருமுகம் மலர்ந்துசொட் டட்டக்
கிளரொளி மணிவண் டறைபொழிற் பழனங்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வளரொளி மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தன்என் மனங்கலந் தானே.                (1)
 

101.     தளிர்  ஒளி-தளிர்போன்ற  ஒளியையுடைய.   மணிப்பூம்
பதம்-அழகிய  மலர்போலும்  திருவடியில்.  அலம்ப-ஒலிக்க.  தெளிர்
ஒளி  மணி  நீர்த்திவலை-தெளிவான  ஒளியை யுடைய அழகிய நீர்த்
துளிகள்.  முத்து  அரும்பி-முத்துப்போலத் தோன்ற. அரும்ப என்பது
‘‘அரும்பி’’  எனத்  திரிந்தது. சொட்டு அட்ட-துளிகளைச் சிந்த, துளி,
வியர்வைத் துளி. ‘சொட்டட்ட ஆடும் ’ என இயையும். பழனம்-வயல்,
‘பொழிலும்   பழனமும்  கம்பலை  செய்யும்  கீழ்க்கோட்டூர்’  என்க.
கெழுவு-பொருந்திய.  கம்பலை-ஆரவாரம்.  ‘கம்பலம்’ என்பது பாடம்
அன்று.    பொழிலிலும்,    பழனத்திலும்    உள்ளவை  செய்கின்ற
ஆரவாரத்தை     அவையே     செய்வனவாக்க         கூறினார்.
மணிஅம்பலம்-மாணிக்கச்   சபை.   மைந்தன்-வலிமை   (தளராமை)
உடையவன்  ஈற்றில்,  ‘இஃதென்ன  வியப்பு’  என்னும் குறிப்பெச்சம்
வருவித்து முடிக்க.


மேல்