3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
104. | தெள்ளுநீ றவன்நீ றென்னுடல் விரும்பும்; செவிஅவன் அறிவுநூல் கேட்கும்; மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் ; கண்கள் விமானமே நோக்கிவெவ் வுயிர்க்கும் ; கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வள்ளலே, மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தனே என்னும்என் மனனே. (4) |
104. தெள்ளு - தெளிவாகிய ; வெண்மையான. ‘நீற்றவன்’ என வருதலேயன்றி, ‘நீறவன்’ என வருதலும் இலக்கணமேயாம். இரண்டாவதன் தொகையோடொப்பதாதலின். ‘‘கானக நாடனை நீயோ பெரும்’’ (புறம்-5.) ‘‘நாடன் என்கோ ஊரன் என்கோ’’ (- -49.) என்றாற்போல்வன பலவற்றுள்ளும் ‘நாடனை. நாடன்’ முதலாக வருவன பலவுங்காண்க. ‘நீறவன்’ என்பது, ‘சிவன்’ என்னும் அளவாய் நின்றது.‘‘என்’’ என்பது, ‘‘செவி’’ முதலிய பலவற்றோடும் சென்று இயையும். அவன் அறிவு நூல்-அவனை அறியும் அறிவைத் தரும் நூல். மெள்ள விளம்புதல்-செபித்தல். விமானம்-மூலத்தான மாளிகை. வெவ்வுயிர்க்கும்-வெப்பமாக மூச்செறியும், சோர்வுறுதலை இனிது விளக்க, மூக்கின் தொழிலாகிய உயிர்த்தலைக் கண்களுக்கு ஏற்றிக் கூறினார். ‘பொழிற்கண் என்பது, ’’பொழிற்கு’’ என உருபு மயக்கமாய் வந்தது. என்னும்-என்று நினைக்கும். |