சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

13. கங்கைகொண்ட சோளேச்சரம்


140.

தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த
   தயாவைநூ றாயிரங் கூறிட்
டத்திலங் கொருகூ றுன்கண்வைத் தவருக்
   கமருல களிக்கும்நின் பெருமை
பித்தனென் றொருகாற் பேசுவ ரேனும்
   பிழைத்தவை பொறுத்தருள் செய்யுங்
கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்தகங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே.                 (8)
 

140. தத்தை-கிளி.     அங்கனையார்  -  மாதர்.  ‘தத்தைபோலும்
அங்கனையார்’  என்க.  தயா-இரக்கம்  ;  என்றது  அன்பை. ‘அதில்’
என்பது,  ‘‘அத்தில்’’ என விரித்தல் பெற்றது. ‘அங்ஙனம் கூறிடப்பட்ட
அன்பில்’  என்பது  பொருள். அங்கு அசைநிலை. ஒருகூறு-ஒருகூறாய
அன்பினை,     ‘பெருமையை’     என,    இரண்டாவது    விரிக்க.
பிழைத்தவை-அவர்கள்   பிழைபடச்   செய்த  செயல்களை  ;  இது
‘பித்தன்’   எனக்   கூறியதைக்   குறியாது  பிறவற்றையே  குறித்தல்,
‘‘பிழைத்தவை’’  என்ற  பன்மையானும் பெறப்படும். ‘‘செய்யும்’’ என்ற
பெயரெச்சம்.    ‘‘கைத்தலம்’’    என்ற  கருவிப்பெயர்   கொண்டது
இக்கைத்தலம்  அபய  கரம்.  ‘‘கைத்தலம்  அடியேன்  சென்னிமேல்
வைத்த’’  என்ற இதனானும் இறைவன் இவ்வாசிரியர்க்கு ஆசிரியனாய்
வந்து அருளினமை அறியப்படும். 


மேல்