156. ‘‘மருமகன் தாய்’’ என்றது, ‘தங்கை’ என்றபடி. உமாதேவியை, ‘திருமால் தங்கை, என்பதுபோலத் திருமகளை, ‘சிவபெருமான் தங்கை’ என்றலும் வழக்கு. ‘‘அரையர்’’ என்றது உயர்வுப் பன்மை. தரு மனை-இன்பத்தைத் தருகின்ற மனைவி. ‘தருமலி’ என்பது பாடம் அன்று. ‘வளன், புரன் என்பன, ‘வளம், புரம்’ என்பவற்றதுபோலி. வளன்சிவபுரன்-செல்வமாவது சிவபுரம். ‘‘சாட்டியக்குடியார்’’ என்றதனை’ ‘கைத்தலம்’ என்பதன் பின்னர்க் கூட்டுக. ‘‘இரு முகம்’’ என்றது ‘முகம் இரண்டு‘ என்னும் பொருட்டு. ‘‘முகம் இரண்டு ; கழல் (பாதம்) மூன்று கைத்தலம் ஏழு’’ என்றது, மாதொரு கூறாகிய (அர்த்தநாரீசுர) வடிவத்தை ஒரு நயம்படக் கூறியவாறு. இறைவன் இறைவியது முகங்கள் இரண்டும் ஒன்றாய் இயைந்தனவாயினும் அவை ஆண்முகமும், பெண்முகமாய் வேறுபட்டு விளங்குதலின், ‘‘இருமுகம்’’ என்றார். இறைவனது இடத்திருவடியும், இறைவியது வலத்திருவடியும் ஒன்றாய் விடுதலால் கழல்கள் மூன்றாயின. இறைவனது இடக்கை இரண்டில் ஒன்றும், இறைவியது வலக்கை இரண்டில் ஒன்றும் ஒன்றாய்விடுதலால் கைத்தலங்கள் ஏழாயின. ‘‘தோலுந் துகிலும் குழையுஞ் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும்-பைங்கிளியும் சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக் கோலம்’’. -(திருவாசகம்.திருக்கோத்தும்பி. 18.) ‘‘உருவிரண்டும் ஒன்றொடொன் றொவ்வா அடி’’ (திருமுறை-6.6.6 என்றாற்போல முன்னையாசிரியர் வியந்தருளிச்செய்ததனை, இவ்வாசிரியர் இவ்வாறாக வியந்தருளிச் செய்தார் என்க. |