சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

24. கோயில்


240.

ஓமப் புகையும் அகிலின் புகையும்
   உயர்ந்து முகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர்மல்கு
   சிற்றம் பலந்தன்னுள் 

வாமத் தொழிலார் எடுத்த பாதம்
   மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித்
   தேவன் ஆடுமே.                            (5)
 


240. ‘‘தீ     மெய்த் தொழில்’’ என்றதை. ‘மெய்த் தீத்தொழில் என
மாற்றி,  ‘மெய்த்  தொழில்,  தீத்தொழில்’  எனத்  தனித்தனி  முடிக்க.
மெய்ம்மை - என்றும் ஒழியாமை. தீத்தொழில்-தீயை ஓம்பும்   தொழில்;
வேள்வி  வேட்டல்.  வாமம்-இடப்பக்கம்.  ‘எடுத்த  எழில்  ஆர் வாம
பாதம்’ என மாற்றிக் கொள்க. இறைவன், வலத் திருவடியை  ஊன்றியும்,
இடத்திருவடியைத்  தூக்கியும்  நடனம்  செய்தல் அறிக.   ‘ பாதத்தின்
கண்’  என  உருபு  விரிக்க.  மழலை-இனிய  ஓசையை   உடைய.  தீ
மெய்-நெருப்புப்போலும் நிறத்தை யுடைய.


மேல்