8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
27. கோயில்
274. | ஆவா இவர்தம் திருவடிகொண் டந்தகன்றன் மூவா உடல்அவியக் கொன்றுகந்த முக்கண்ணர் தேவாம் மறைபயிலும் தில்லைச்சிற் றம்பலவர் கோவா இனவளைகள் கொள்வாரோ என்னையே. (7) |
274. ஆவா, இரக்கக் குறிப்பு. ‘‘இவர்’’ என்றது எழுவாய். அந்தகன்-கூற்றுவன். மூவா உடல்-அழியாத உடல் ; அமர தேகம். அவிய-அழியும்படி. உகந்த-தம் அடியவனை விரும்பிக் காத்த ’’ முக்கண்ணர்’’ என்றது. ‘இறைவர்’ என்றபடி. இதன்பின், ‘அவ்வாறாக’ என்பது வருவிக்க. தே ஆம்-தெய்வத் தன்மை பொருந்திய. ‘சிற்றம்பலவராகிய இவர்’ என முன்னே கூட்டுக. செய்யுளாதலின் சுட்டுப்பெயர் முன் வந்தது. ‘‘கோவாய்’’ என்றதன்பின் ‘வந்து’ என ஒருசொல் வருவிக்க. ‘கோவா வளை’ என்பது பாடம் அன்று. ‘‘கொள்வாரோ’ என்ற ஓகாரம் சிறப்பு. ‘இது தக்கதன்று’ என்பது குறிப்பெச்சம். ‘என்னை வளைகள் கொள்வார்’ என முன்னே கூட்டுக. ‘வளைகள் கொள்ளுதல்’ என்பது ‘மெலிவித்தல்’ எனப் பொருள்தந்து, ‘‘என்னை’’ என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. |