சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

8. கோயில்


87.

சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத்
   திசைகளோ டண்டங்க ளனைத்தும்
போர்த்ததம் பெருமை சிறுமைபுக் கொடுங்கும்
   புணர்ப்புடை அடிகள்தங் கோயில்

ஆர்த்துவந் தமரித் தமரரும் பிறரும்
   அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                  (8)
 

87.   சீர்த்த-சிறப்புப்  பெற்ற.    திண்புவனம்,      மண்ணுலகம்.
‘‘திசை’’   என்றது.   பூமியைச்   சூழ்ந்து     நிற்கின்ற    இந்திரன்

முதலியோரது     உலகங்களை,       போர்த்த-பெற்றுள்ள.     தம்
பெருமை-அவற்றது    பெருமைகள்   பலவும்,     ‘சிறுமையாய்ப்புக்கு
ஒடுங்கும்  புணர்ப்பு’  என்க.  ‘புணர்ப்பு’  என்றது. ஆற்றலை, ‘எல்லா
உலகங்களின் பெருமைகளூம் தனது ஆற்றலுள்ளே மிகச்  சிறியனவாய்
ஒடுங்கத்  தக்க  பெரியோன்’ என்றவாறு. அமரித்து-போரிட்டு ; ‘நான்
முன்னே,  நான்  முன்னே  என்று  ஒருவருக்கு  முன்னே  ஒருவராய்
முற்பட்டு  வந்து’ என்பதாம். ‘கடல்போல இடுகின்ற தீர்த்த நீர்’ என்க.
திரை-அலைவீசுகின்ற.     ‘அமரரும்,     பிறரும்    தூய    நீரால்
திருச்சிற்றம்பலத்தில்  இறைவனை வழிபடுகின்றனர்’ என்றபடி.  ‘‘பிறர்’’
என்றதும், வானுலகத்தவரை.


மேல்