சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

1. கோயில்


11.

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டா
   தயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட் டோர்வரி யாயை
   மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
   சிறுமையிற் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே! உன்னைத்
   தொண்டனேன் நினையுமா நினையே.            (11)

திருச்சிற்றம்பலம்
 


11.  ‘‘ஓர்வரியாய்’’  எனப்  பின்னர்   வருகின்றமையின்   வாளா,
‘‘மாட்டாது’’  என்றார். ‘‘முறை முறை’’ என்ற  அடுக்கு, பன்மை பற்றி
வந்தது.     ‘முறையிட்டும்’     என்னும்    உயர்வு    சிறப்பும்மை
தொகுத்தலாயிற்று. ‘ஓர்ப்பரியாயை’  என்பதும் பாடம்.  ‘‘அரன்’’ என
முன்னிலையிற்  படர்க்கை  வந்தது. ‘‘அரன்சீர்  அறிவிலா வெறுமைச்
சிறுமையிற்  பொறுக்கும்’’  என்றது.  ‘உனது  பெருமையைச்  சிறிதும்
அறியாது       இகழும்        அறிவிலிகளது      இகழுரையைப்
பொறுத்துக்கொள்ளுதல்  போலப்   பொறுத்துக்கொள்கின்ற’ என்றபடி
வெறுமை-     அறிவின்மை.     சிறுமை - இகழ்ச்சி.  இவ்விரண்டும்
ஆகுபெயர்களாய் அவற்றை உடைய  மக்கள்மேலும், சொற்கள்மேலும்
நின்றன.   ‘சிறிதும்  அறியாது  இகழ்ந்துரைக்கின்றவன்  சொற்களைப்
பொறுப்பவனுக்குச்    சிறிது  அறிந்து   புகழ்கின்ற   புன்சொல்லைப்
பொறுத்தல்    இயல்பே   என்றற்கு   அவ்வன்சொற்   பொறுத்தலை
உவமையாக்கினார்.   ‘பொறுக்கும்  கருணாநிலயமே’  என  இயையும்.
நிலயம்-இருப்பிடம்.  இறுதித்  திருப்பாட்டுக்களில்  தம்மைப்   பற்றிக்
குறிக்கின்ற இவ்வாசிரியர், அவற்றைத்  திருக்கடைக்காப்பாக  அருளாது,
தமது பாடலை இறைவன் ஏற்றருள வேண்டிக் கூறுகின்றார்.


மேல்