சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

14. திருப்பூவணம்


148.

கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர்
   கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன்
   அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய் ;
நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க
   நிலைவிளக் கலகில்சா லேகப்
புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே.                (5)
 

148. வினையைக் கடலாக உருவகிக்கின்றவர், அதுதான் பாசங்களுள்
ஒன்றாதலை  விளக்குதற்கு,  ‘‘வினைப்  பாசக்  கடல்’’ என்றார். ஐவர்
கள்ளர்-ஐம்பொறிகள். ‘‘மெள்ள’’ என்றது, ‘இனிமையாகவே’ என்றவாறு.
அவர்  சென்றவழியே   சென்று  நீக்கினமை பற்றி இவ்வாறு கூறினார்.
இனி ‘சிறிது சிறிதாக நீக்கி’  என்றும் ஆம் துரந்து-ஓட்டி. அடையுமாறு
அடைதலாவது,  நூலிற்சொல்லப்பட்ட நெறிக்கண் நிற்கும் முறையானே
அடைதல். இதனை, ‘விதி  மார்க்கம்’ என்பர். ‘இனி நீ எனக்கு அருள்
செய்    ;    அல்லது   அருள்செய்யாதொழி   ;   அஃது   உனது
உள்ளத்தின்வழியது  ;  யான்  செயற்பாலதனைச் செய்து  விட்டேன் ;
இந்நிலையினின்றும்  வேறுபடேன்’  என்பதாம்.  ‘நெடுநிலை  மாடத்து
நிலைவிளக்குச்     சாலேகப்புடை     இலங்கும்     வீதி’    என்க.
இரவு-இரவின்கண்.     கிழிக்க-போக்குதற்     பொருட்டு.     நிலை
விளக்கு-அணையாது   உள்ள  விளக்கு.  சாலேகப்புடை-சாளரங்கட்கு
வெளியே. இலங்கும்-ஒளியை வீசுகின்ற.  


மேல்