சேந்தனார் திருப்பல்லாண்டு
29. கோயில்
299. | குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (11) |
299. ஏத்து ஒலி-துதித்தலின் ஓசை. ‘குழாமாகப் பெருகி’ என ஆக்கம் விரிக்க. பெருகி-பெருகுதலால். விழவு ஒலி-இறைவனது சிறப்பு நாளிற்கு உரிய ஓசைகள். விம்மி மிகு-நிறைந்து மிகுகின்ற. இது திருவாரூரின் சிறப்பேயாம். ‘திருவாரூரிற் பிறந்த பழஅடியார்’ என்க. தில்லை சைவ அந்தணர்க்கன்றிப் பிறர்க்கு இடமாகாதிருந்தது போலத் திருவாரூர் சைவர்கட்கன்றி இடமாகாதிருந்தது. அதனால், அங்குப் பிறந்தோர் யாவரும் சிவபெருமானுக்கு வழிவழித் தொண்டராய பழவடியாராதலின், அவரோடு கூடிப் பல்லாண்டு கூறுதலைச் சிறப்புடையதாக அருளிச்செய்தார். இவ்வாற்றால் தில்லைவாழந்தணர்போலத் திருவாரூர்ப் பிறந்தாரும் இயல்பாற் சிறந்தவராதல் பற்றியே ஆளுடைய நம்பிகள், ‘‘தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’’ என்றாற்போல, ‘‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்’’ என்று அருளிச்செய்தார் மழவிடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடி-மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையராய் (பெ.பு-ஞானசம்-17.) உள்ளவரே தம்முள் மணம் செய்துகொள்ளும் குடிகள். ‘அவற்றிற் பிறந்த பழவடியார்’ என்க. |