117. மண்டு அழல் வெதும்பி - மிக்க தீயால் வெந்தபின்பு. வினைபடு-தொழில் பொருந்திய, ‘‘நிறை’’ என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய், நிறைதற் கருவியை உணர்த்திற்று. நிறைதற்கருவி, நீர் நிறைந்து நிற்றற்கு ஏதுவாகிய சால். ‘மண்டு அழல்வெதும்பிய பின்னர்ப் பூம்புனல் பொழிந்து நிற்பது’ என்றதனால், புனல் பட உருகுதல். அங்ஙனம் வெதும்புதற்கு முன்னராயிற்று. ‘‘அழலில் வெதும்புதற்கு முன்னே புனல் சிறிதுபடினும் குழைந்துபோவதாகிய நீர்ச் சால், அழலில் வெதும்பிய பின்னர்ப் புனலை நிறையக் கொண்டும் நிலைத்துநின்று உயிர்களைக் காப்பாற்றுவதுபோல, நீ என் மனத்தில் வேதகத்தைப் போல வருதற்குமுன்பு இவ்வுலகத்தைச் சிறிது பற்றினும் என் மனம் அதனுள் அகப்பட்டு மீளமாட்டாது மயங்கி உன்னை நினைத்தற்கு உதவவில்லை. நீ வந்தபின் அதனை நிரம்பப் பற்றினும் அதனுள் அகப்படாது நின்று உன்னை நான் எப்பொழுதும் நினைத்தற் குத்துணையாய் நிற்கின்றது’ என்னும் பொருள் உவமையாற் குறிக்கப்பட்டது. ‘179-ம் பாடலைக் காண்க. ‘போல’ என, தொகுக்கப்பட்ட அகரத்தை விரித்து, ‘போல ஆகும்படி’ என உரைக்க. ‘போல மகிழ்ந்த’ என இயையும். நிறைந்த-நிரம்பிய. வேதகம்-இரச குளிகை. இது செம்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும். பல வகை மருந்துகளால் செவ்வனே ஆக்கப்பட்ட குளிகையே பிற உலோகங்களைப் பொன்னாக மாற்றுமன்றி, அவ்வாறு ஆக்கப்படாது குறையுடைய குளிகை மாற்றாமையின், ‘‘நிறைந்த வேதகம்’’ என்றார். வேதகத்து-வேதகம்போல (மகிழ்ந்த என்க). மனத்தைத் திருத்தியதற்கு வினைமுதலாயினமை தோன்ற. இறைவனை முன்பு அழலோடு ஒப்பித்தவர், பின்பு வியப்புத் தோன்ற, வேதகத்தொடு ஒப்பித்தார். நெகுதல், இறைவனிடத்து அன்பு காரணமாகவும், உயிர்களிடத்து அருள்காரணமாகவுமாம். ‘‘மகிழ்ந்த’’ என்றது, ‘எழுந்தருளி மகிழ்ந்த’ என முன்னிகழ்ச்சியையும் குறித்துநின்றது. வினை படும் உடல்-வினை உண்டாதற்கு ஏதுவாய உடம்பு. ‘‘உடல்’’ என்றது, அதனகத்துள்ள மனத்தை, ‘‘எந்தையே ஈசா உடல்இடங் கொண்டாய் யான் இதற்கிலனொர்கைம் மாறே’’ (திருவாசகம்-397) ‘‘நிலாவாத புலாலுடம்பே புகுந்துநின்ற கற்பகமே யான் உன்னை விடுவே னல்லேன்’’ (திருமுறை-6.95.4.) என்றாற்போல வந்தன காண்க. விழுமிய-சிறந்த விமானம்-திருக்கோயிற் கருவறை மாளிகை. |