சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

16. தஞ்சை இராசராசேச்சரம்


162.

உலகெலாம் தொழவந் தெழுக திர்ப்பரிதி
   ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம் பச்சோ !
   அங்ஙனே யழகிதோ! அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
   பருவரை ஞாங்கர்வெண் டிங்கள்
இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.                   (1)

 

162.  ‘எழு பரிதி’ என இயையும். பரிதி - சூரியன், ‘நூறாயிர கோடி
பரிதிகளின்  ஒளியினை   உடைய  பரிதிஒன்று  உளதாயின், அதனது
அளவாய   ஒளியினை   உடைய  திருவுடம்பு’  என்க.  ‘‘திருவுடம்பு’’
என்றதன்பின்னர்,   ‘உண்டு’    என்பது   எஞ்சிநின்றது.   ‘‘அழகிது’’
என்றதற்கு,  ‘அஃது’  என்னும்   எழுவாய்  வருவிக்க. ஓகாரம், சிறப்பு.
அரணம்  - கோட்டை. ‘பல மாடம்’  என்க. குலாம் படை செய்-அழகு
பொருந்திய பொருட் கூட்டத்தால்  செய்யப்பட்ட. ‘‘பருவரை’’ என்பதில்
‘போல’ என்பது விரித்து, ‘பெரிய  மலையிடத்துத் தவழ்தல் போல’ என
உரைக்க.  ‘வெண்டிங்களாகிய   இலை’  என்க. இலை-தகடு. வெள்ளித்
தகட்டைக்   குறித்தவாறு.     பதணம்மதிலுள்  மேடை.  இஞ்சி-மதில்.
‘அரணத்தை,   இஞ்சிசூழ்  தஞ்சை’   என்க.  ‘இவர்க்கு  அலகெலாம்
பொதிந்த திருவுடம்பு உண்டு’ என  முன்னே சென்று முடியும். தஞ்சை,
‘தஞ்சாவூர்’ என்பதன் மரூஉ.  


மேல்