சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

16. தஞ்சை இராசராசேச்சரம்


171,

தனியர்எத் தனைஓ ராயிர வருமாந்
   தன்மையர் என்வயத் தினராங்
கனியர்அத் தருதீங் கரும்பர்வெண் புரிநூற்
   கட்டியர் அட்டஆ ரமிர்தர் ;
புனிதர்பொற் கழலர் ; புரிசடா மகுடர் ;
   புண்ணியர் ; பொய்யிலா மெய்யர்க்
கினியரெத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.                  (10)
 

171.     தனியர்-ஒருவர்,    எத்தனை   ஓராயிரமாம்  தன்மையர்-
எத்துணையோ  ஆயிரப்பொருளாயும்  நிற்கும் தன்மையை  உடையவர்.
‘‘ஏகன்    அனேகன்    இறைவன்’’     எனத்  திருவாசகத்துள்ளும்
(சிவபுராணம்-5.)  கூறப்பட்டது.  என்    வயத்தினராம் கனியர்-எனக்கு
உரியவர் ஆகிய கனிபோல்பவர். ‘‘அத்  தரு தீங்கரும்பர்’’ என்றதனை,
‘தீதரு   அக்கரும்பர்’   என   மாற்றி,    ‘இனிமையைத்   தருகின்ற
அத்தன்மையை    யுடைய      கரும்புபோல்பவர்’   என  உரைக்க.
கட்டியர்-அணிந்தவர்.  அட்ட  ஆரமிர்தர்.   மிகக்  காய்ச்சிய  அரிய
பால்போன்றவர்.  மிகக்  காய்ச்சிய  பால்   மிக்க  சுவையுடைத்தாதல்
அறிக.   ‘பொய்  இலா  மெய்யர்க்கு   எத்தனையும்  இனியர்’  என்க.
‘‘இவர்க்கே’’   என்றதன்பின்,  முன்னைத்   திருப்பாட்டிற்  சொல்லிய
‘‘வாழியரோ’’  என்றதனை  இங்கும்  வருவித்து  முடிக்க.  அவ்வாறு
வருவியாதொழியின், முன்னர்க் கூறியவாறே இங்கும், ‘இவரே என்பதே
பாடமாதல் வேண்டும்.  


மேல்