சொல்லகராதிச் சுருக்கம்

4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

18. திருவாரூர்


183.
  

கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
   கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந் திங்ஙன்
   முரிவதோர் முரிவுமை யளவும்
தக்கசீர்க் கங்கை யளவும்அன் றென்னோ
   தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி
   வீடங்கராய் நடங்குலா வினரே.                  (1)
 

183.     வால்    முத்தின்-வெண்மையான    முத்துக்களையுடைய.
சரி-தோள்வளை.       வளை-கைவளை.       முரிவது         ஓர்
முரிவு-விளங்குவதாகிய  ஒரு    விளக்கம்.  ‘உமாதேவியின் அளவிலும்,
கங்காதேவியின் அளவிலும் அடங்குவதன்று;   மேற்பட்டது’ என்றவாறு.
உம்மைகள், எண்ணோடு சிறப்பு.  ‘‘என்னோ தம் ஒருப்பாடு’’ என்றதை,
‘தம்  ஒருப்பாடு  என்னோ’  என   மாற்றி  இறுதியிற் கூட்டி உரைக்க.
ஒருப்பாடு-கொள்கை.   ‘வான்   பழித்து  இம்மண்  புகுந்து  மனிதரை
ஆட்கொள்ளுதல்போலும்’       என்பதாம்.     இவர்     முசுகுந்தச்
சக்கிரவர்த்தியால்  இந்திரலோகத்திலிருந்து   கொணர்ந்து திருவாரூரில்
எழுந்தருளுவிக்கப்   பட்டவராதல்    அறிக.   ஆதி-முதல்வன்;  இது
பன்மையொருமை  மயக்கம்.  வீதி    வீடங்கர்-தெருவில்  உலா வரும்
அழகர்.   இது   தியாகராசருக்குப்   பெயர்.   திருவாரூரில்  புற்றிடம்
கொண்டார்     திருமூலட்டானத்தேயிருக்க,       இவர்     வீதியில்
எழுந்தருளிவந்து     காட்சி       வழங்குபவராதலின்     இப்பெயர்
உடையராயினார்.  இவர்  வீதியில்  எழுந்தருளுங்கால்  நடனம் புரிந்து
வருதலும்,    அந்த   நடனம்,   ‘அசபா நடனம்’  என்று போற்றப்
படுதலும்,  அந்நடனத்தை  இவர்   முதற்கண்  திருமாலின் இதயத்தில்
இருந்து புரிந்தவராதலும் அறிந்து கொள்க.  


மேல்