7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
22. கோயில்
221. | படங்கொள் பாம்பணை யானொ டுபிர மன்ப ரம்பர மாவரு ளென்று தடங்கை யால்தொழ வுந்தழல் ஆடுசிற் றம்பலவன் தடங்கை நான்கும்அத் தோள்க ளுந்தட மார்பினிற் பூண்கள் மேற்றிசை விடங்கொள் கண்டமன்றே வினை யேனை மெலிவித்தவே. (7) |
221. பரம் பரமா-மேலானவற்றுக்கும் மேலானவனே; உனக்குமேல் ஒன்று இல்லாதவனே. ‘‘தொழவும் ஆடு சிற்றம்பலவன்’’ என்றது, ‘ஆடுவார் தொழுவாராயும், காண்பார் தொழப்படுவாராயும் இருத்தல் இயல்பாக, காண்பார் தொழுவாராக, ஆடுவான் தொழப்படுபவனாய் இருக்கின்றான்’ என்றவாறு. எனவே, ‘‘தொழவும்’’ என்ற உம்மை உயர்வு சிறப்பாயிற்று. ‘‘பூண்கள், கண்டம்’’ என்பவற்றிலும் எண்ணும்மை விரிக்க. பூண்கள்-அணிகலங்கள். மேற்று இசை-மேலதாய்ப் பொருந்திய. ‘மேல் திசை’ எனப் பிரித்து, ‘மேலிடத்துள்ள’ என்றலுமாம். ‘மெலிவித்ததே’ என்பது பாடம் அன்று. இதனுள், ‘‘வினை’’ என்ற ஒன்றுமே கூன். |