213. ‘‘வாளா’’ என்றது, ‘வழிபடுதலைச் செய்யாது’ என்னும் பொருட்டு. ‘புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்’’என்பது முதலாக இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையுள் திருநாவுக்கரசர் அருளிச் செய்தல் அறிக. மாலுக்குரிய, ‘‘வீழ்ந்து’’ என்பதன்பின், அயனுக்குரிய, ‘பறந்து’ என்பது வருவிக்க. ‘‘மாண்பு’’ என்றது, அதனையுடைய திருமேனியை உணர்த்திற்று. கூத்தப் பெருமான் திருமேனியும் மாலயன் பொருட்டுத் தோன்றிய வடிவின் வேறல்லவாகலின் ‘மால் அயன் காண்பரிய மாண்பினதாகிய இதனை’ என்றார். தோளாரத் தொழுதல், கைகளை உச்சிமேற் சேர்த்தித் தொழுதலாம். துணை-திருவடித்துணை. ‘தோளாரவும், கையாரவும் துணையை ஆரத்தொழுதாலும்’ என்க. ஆள்-அடிமை. ‘‘ நீ’’ என்றதன்பின், ‘என்னை’ என்பது வருவித்து, ‘நீ என்னை உடையதுவும் ஆளோ’ என மாற்றி உரைக்க. ‘உடையதுவும் ஆளோ’ என்றது. ஆளாக உடையையோ’ என்றவாறு. ‘உடையை அல்லையாயின், அடியேன் உன் தாள்சேரும் நாளும் ஒன்று உண்டாகுமோ’ என்க. எனவே, ‘‘ஆளோ’’ என்ற ஓகாரம் ஐயப்பொருளிலும், ‘‘ஏதோ’’ என்னும் ஓகாரம் இரக்கப் பொருளிலும் வந்தனவாம். இனிப் பின்னின்ற ஓகாரத்தை அசைநிலையாகவும் ஆக்கி, ‘உடையாயின், ‘அடியேன் உன் தாள் சேரும் நாள் ஏது (யாது)’ என வினாப்பொருட்டாகவும் உரைக்க. |