232. ‘‘உடையும், உண்பதும்’’ என்ற உம்மைகள் எச்சப் பொருள. நஞ்சின்றியிருத்தலைக் குறிக்க, "நல்அரவம்’’ என்றார். அரவம் (பாம்பு) கச்சாக நின்று உடையைக் காத்தலின் அதனையும், ‘உடை’ என்று சார்த்திக்கூறினார். பலி-பிச்சை. ‘‘விடையது’’ என்றதில் அது, பகுதிப் பொருள் விகுதி. மேவு இடம்-இருக்கும் இடம். ‘‘இடம்’’ என்றதிலும், எச்ச உம்மை விரிக்க, வரை-மலை; கைலை காடு அடர்ந்து, புலியும், அரிமாவும் போல்வன வாழ்தலின், ‘கொடிது’ எனப்பட்டது. மடை கொள்வாளை- மடையை வாழும் இடமாகக் கொண்ட வாளை மீன்கள். ‘‘மடை’’ என்றது, ஆதனால் தடுக்கப்படும் நீரை, ‘அனலோடு ஆடும்’ என மூன்றாவது விரித்துரைக்க. உடைய கோ- எல்லாரையும், எல்லாவற்றையும் ஆளாகவும், உடைமையாகவும் உடைய தலைவன். ‘யாரையும்’ என்பது, ‘ஆரையும்’ என மருவிற்று. ‘தில்லையம்பலத்தாடும் கோவிற்கு உடையும் தோலும், அரவமுமே. உண்பதும் பலி தேர்ந்தே; ஊர்வதும் விடையே; மேவிடமும் கொடுவரையே. ஆகிலும் என் நெஞ்சம் அவனையன்றி மற்று ஆரையும் உள்ளுவதை நான் காணவில்லை’ என்க. விரிக்கப்படும் ஏகாரங்கள் பிரிநிலை. |