சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

25. கோயில்


253.

கூத்தனை வானவர்தங் கொழுந்
   தைக்கொழுந் தாய்எழுந்த
மூத்தனை மூவுருவின் முத
   லைமுத லாகிநின்ற
ஆத்தனைத் தான்படுக்கும் அந்
   தணர்தில்லை யம்பலத்துள்
ஏத்தநின் றாடுகின்ற எம்
   பிரான்அடி சேர்வன்கொலோ!                  (7)
 


253.    வானவர்தம் கொழுந்து-தேவ கூட்டத்திற்குத் தலையாயவன்.
பின்னர்,  ‘‘கொழுந்தாய்’’ என்றது, ‘எல்லாப் பொருட்கும் கொழுந்தாய்’’
என்றவாறு.  எழுந்த  -  தோன்றிய;  என்றது,  படைப்புக்  காலத்தில்
முதற்கண்  உருவும்,  பெயரும்,  தொழிலும்  கொண்டு  நின்றமையை,
‘‘முளைத்தானை    எல்லார்க்கும்  முன்னே தோன்றி’’   என்றார்
நாவுக்கரசர்   (திருமுறை-6.19.9).   ‘மூத்தவனை’   என்பதில்  அகரம்
தொகுத்தலாயிற்று.  மூத்தவன்-முன்னோன்.  நிலையை, ‘உரு’ என்றார்.
முந்நிலையாவன.  ‘படைக்கும் நிலை, காக்கும் நிலை, அழிக்கும் நிலை’
என்பன. பின்னர்,  ‘‘முதலாகி நின்ற’’ என்றது, ‘எல்லாச் செயல்கட்கும்

முதலாகி     நின்ற’  என்றவாறு.   ‘நின்ற எம்பிரான்’ என இயையும்.
‘‘ஆத்தனைப்   படுக்கும்   அந்தணர்’’  என்றதற்கு,  முன்,  ‘‘ஆவே
படுப்பார்  அந்தணாளர்’’  என்றதற்கு  (196)  உரைத்தவாறே உரைக்க.
தான்,  அசைநிலை,  ‘‘தில்லை  யம்பலத்துள்’’  என்றதனை,  ‘‘நின்ற’’
என்றதன்பின்னர்க்   கூட்டுக.   கொல்,  ஐய  இடைச்சொல்  ஓகாரம்,
இரக்கப்பொருட்டு.


மேல்