8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
26. கோயில்
267. | ஆசையை அளவறுத் தார்இங் காரே அம்பலத் தருநடம் ஆடு வானை வாசநன் மலரணி குழல்மடவார் வைகலும் கலந்தெழு மாலைப் பூசல் மாசிலா மறைபல ஓது நாவன் வண்புரு டோத்தமன் கண்டு ரைத்த வாசக மலர்கள்கொண் டேத்த வல்லார் மலைமகள் கணவனை யணைவர் தாமே. (11) திருச்சிற்றம்பலம் |
267,‘‘ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே’’ என்பதன் பின், ‘ஆதலின்’ என்னும் சொல்லெச்சம் வருவித்துரைக்க. ‘ஆசையை அளவறுத்தல் இயலாதாகலின் மடவார் பலரும் கலந்தெழுவாராயினர்’ என்றவாறு. ‘நடம் ஆடுவானைக் கலந்து எழும்’ என இயையும். கலந்து - மனத்தாற் கூடி. இனி, ‘‘கலந்து’’ என்றதனை ‘கலக்க’ எனத் திரித்தலும் ஆம். வைகலும் - நாள்தோறும். மாலைப் பூசல் - மாலையைப்பெற, ‘நான் நான்’ என்று செய்யும் பூசல். ‘பூசலை உரைத்த வாசகம்’ என்க. ‘‘கண்டு’’ என்றது, ‘படைத்து’ என்றவாறு. வாசக மலர்கள்-சொற்களாகிய பூக்கள். |