8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
27. கோயில்
275. | என்னை வலிவார்ஆர் என்ற இலங்கையர்கோன் மன்னு முடிகள் நெரித்த மணவாளர் செந்நெல் விளைகழனித் தில்லைச்சிற்றம்பலவர் முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார்இம் முத்தரே. (8) |
275. வலிவார்-வலிசெய்வார்; நலிகின்றவர். ‘‘வந்து மூழ்கியும் தாரான் வலிசெய்கின்றான்’’ (பெ.பு.திருநீலகண்ட-32.) என்றது காண்க. மணவாளர்-அழகர். ‘‘மணவாளர்’’ என்றாள், உமையது அச்சத்தைத் தவிர்த்தமை கருதி. அதனால், இவளது காதல் மீக்கூர்தல் பெறப்படும். ‘மணவாளர் இச்சிற்றம்பலவர்’’ எனச் சுட்டும். ‘ஆயினும்’ என்னும் சொல்லெச்சமும் வருவிக்க. தான், அசைநிலை. கண்டறிவார்-சிலரால் கண்டறியப்பட்டவர்; என்றது, ‘சிலர் தலைப்பட்டுணர்ந்து, ‘‘அற்றவர்க்கு அற்ற சிவன்’’ (திருமுறை-3.120.2.) என்றாற்போலக் கூறப்பட்டவர்’ என்றபடி. அவ்வியல்பு தன்னளவில் இவர்மாட்டுக் காணப்படாமையின், ‘‘முன்னம்’’ கண்டறிவார் ஒவ்வார்’’ என்றாள். ‘‘அறிவார்’’ என்றது காலமயக்கு. |