9. சேதிராயர் திருவிசைப்பா
28. கோயில்
281. | காரி கைக்கரு ளீர்கரு மால்கரி ஈரு ரித்தெழு போர்வையி னீர்மிகு சீரியல் தில்லை யாய்சிவ னேஎன்று வேரி நற்குழ லாள்இவள் விம்முமே. (3) |
281. ‘‘காரிகைக்கு அருளீர்’’ என்றதை இறுதிக்கண் கூட்டி, ‘‘காரிகைக்கு’’ என்றது. ‘இவட்கு’ எனச் சுட்டளவாய் நின்றதாகலின், ‘‘இவள்’’ என்றதற்கு, ‘‘காரிகை’’ என உரைக்க. ‘கருங்கரி, மால் கரி’ எனத் தனித்தனி இயைக்க. மால்-பெரிய. ‘‘ஈர் உரித்து’’ என்றது, ‘‘ஈர்ந்து உரித்து’’ எனப் பொருள் தந்தது. ‘‘வரிப்புனை பந்து’’ என்றாற் போல (முருகு-568). சீர் இயல்-தன் புகழ் எங்கும் பரவிய. வேரி-தேன். ‘குழலாளாகிய இவள்’ என்க. ‘‘சீரியல் தில்லையாய்’’ என்றது தலைவி கூற்றாய் வேறு முடிதலின், பால் வழுவாகாமை உணர்க. |