சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

7. திருவிடைக்கழி


70.

இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க
   எழில்கவர்ந் தான் இளங்காளை
கவளமா கரிமேற் கவரிசூழ் குடைக்கீழ்க்
   கனகக்குன் றெனவருங் கள்வன்
திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்குங்
   குழகன்நல் லழகன்நம் கோவே.                  (2)
 

70.   வார்  -  கச்சினையுடைய.  பீர் - பசலை. ‘‘இவளை  எழில்
கவர்ந்தான்’’ என்றது,   ‘பசுவைப்  பால்கறந்தான்’  என்பது   போல
நின்றது.   கவளம்,  யானை   உண்ணும்      உணவு.    எழிலைக்

கவர்ந்தமை    பற்றி,   ‘கள்வன்’   என்றாள்;   எனினும்,    இஃது
இகழ்ந்ததன்று; புகழ்ந்து  கூறிய காதற் சொல்லேயாம். திவள்    அம்
மாளிகை -ஒளி வீசுகின்ற அழகிய  மாளிகை.  ‘‘நங்கையாள்’’ என்றது
தலைவியை. நயக்கும்  -  விரும்புகின்ற.   குழகன்   -   இளைஞன்.
‘‘நங்கை யானைக்கும்’’ எனப் பாடம்  ஓதி, அதற்கு,   ‘தெய்வயானை’
என உரைப்பாரும் உளர்.


மேல்