2. சேந்தனார் திருவிசைப்பா
7. திருவிடைக்கழி
72. | தானமர் பொருது தானவர் சேனை மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன் மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை மறைநிறை சட்டறம் வளரத் தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கோனமர் கூத்தன் குலஇளங் களிறென் கொடிக்கிடர் பயப்பதுங் குணமே. (4) |
72. தானவர்- அசுரர். ‘வானவர் சேனை மடிய’ எனப் பாடம் ஓதி, அதற்கியைய உரைத்தல் பொருந்தாமை அறிக. மறை நிறை-வேதத்தின்கண் நிறைந்துள்ள. செம்மையுணர்த்தும் ‘சட்ட’ என்னும் இடைச்சொல்லில் அகரம் தொகுத்தலாயிற்று, ‘‘சட்டோ நினைக்க மனத்தமுதமாம் சங்கரனை’’ (திருவாசகம் - கோத்தும்பி.7.) என்றதிற்போல. சட்ட அறம் - செம்மையான அறம். ‘அறம் வளர நின்ற இளங்களிறு’ என இயையும். ‘‘கோன்’’ என்றதும், கூத்தனையே குறித்தது. அமர் கூத்தன்- விரும்பப்படும் கூத்தினையுடையவன். குலம் - மேன்மை. கணபதி மூத்தகளிறாதல்பற்றி முருகனை. ‘இளங்களிறு’ என்றாள். ‘‘மானமர் மடக்கை வள்ளல்தன்பிள்ளை’’ என முன்னர்க் கூறிப் பின்னரும், ‘‘கூத்தன் குல இளங்களிறு’’ என்றது. ‘உயிர்களின் இடரைப் போக்குதற்குக் கூத்தினை விரும்பி ஆடும் அவன்மகன், என் மகளுக்கு இடர்பயப்பது குணமாகுமோ’ என்னும் கருத்தைத் தோற்றுவித்தற் பொருட்டாம். |