சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

9. கோயில்


92.


 

சந்தன களபம் துதைந்த நன்மேனித்
   தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழ லுருவிற் பொலிந்துநோக் குடைய
   திருநுத லவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்
   டெரிவதொத் தெழுநிலை மாடம்
அந்தணர் அழலோம் பலைபுனற் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                  (2)
 

92.     களபம்-குழம்பு.  துதைந்த-செறிந்த.  ‘மேனி    முழுதினும்
வெண்பொடி  ஆடும்  உரு’ என்க. தவள வெண்பொடி, ஒரு  பொருட்
பன்மொழி ;  ‘மிகவும்   வெள்ளிதாகிய  பொடி’   என்க.   தழல்உரு-
நெருப்புப் போலும் வடிவம்.  நெருப்பு,   வண்ணம்    பற்றி    வந்த 
உவமை.  உருவிற்   பொலிந்து  -  வடிவத்தோடு   விளங்கி.  இந்தன
விலங்கல்-விறகு மலை.    ‘விலங்கலாய்’ என   ஆக்கம்    வருவித்து,
அதனை,    ‘‘எறி’’      என்பதனோடு     முடிக்க.     எறி புனம்-
வெட்டப்பட்ட  காடு.  ‘ஓத்து’ என்றதனை   ‘ஒப்ப’   எனத்   திரிக்க.
ஒப்ப-ஓத்து விளங்குமாறு, மாடத்துக்கண் என உருபு விரிக்க. 


மேல்