சொல்லகராதிச் சுருக்கம்

5. கண்டராதித்தர் திருவிசைப்பா

20. கோயில்


201.

இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன்
   இருபது தோளும்இற
மலைதான்எடுத்த மற்றவற்கு
   வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன் றெய்த வில்லி
   செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொற் கையி னானைக்
  காண்பதும் என்றுகொலோ.                     (7)
 

201. ‘‘மலைதான்  எடுத்த’’  என்பதை முதலிற் கூட்டுக. இற-முரிய.
‘இறச்   செய்து’  என  ஒருசொல்  வருவிக்க   ‘மறக்கருணையின்பின்
அறக்கருணை  செய்தமையைக்குறித்தலின், மற்று,   வினைமாற்றின்கண்
வந்தது.   நாள்-நீண்ட   வாழ்நாள்.   சிவபெருமான்   இராவணனுக்கு
வாளொடு நாள்கொடுத்தமையை,  

‘‘எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
   துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
   கோல வாளொடு  நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்
   செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.’’
  

என்னுசுந்தரர்திருமொழியானும்        (திருப்பதிகம்-55.9.)      அறிக.
கலையார்  மறிபொற் கையினான் என்பது   ‘‘ஒருபெயர்த் தன்மைத்தாய்
நின்று   ‘‘அம்பலத்து’’  என்பதற்கு    முடிபாயிற்று. கலை-ஆண்மான்;
மறி-கன்று  (குட்டி).  ‘கலை  மறி  ஆர்  கையினான்’   என  மாற்றிப்
பொருள் கொள்க. பொன்-அழகு.  


மேல்