சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

1. கோயில்


5.

கோலமே ! மேலை வானவர் கோவே !
   குணங்குறி இறந்ததோர் குணமே !
காலமே! கங்கை நாயகா! எங்கள்
   காலகா லா ! காம நாசா !
ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்
   கோயில்கொண் டாடவல் லானே !
ஞாலமே ! தமியேன் நற்றவத் தாயைத்
   தொண்டனேன் நணுகுமா நணுகே               (5)
 

5.கோலம்- உருவம்,     ‘‘குணம்   குறி   இறந்ததோர்’’  என்பது,
தாப்பிசையாய்  இதனோடும்  இயையும்,  குணம்   குறிகள், ஆண்மை
பெண்மைகளை    அறிய    நிற்பனவாம்.    உருவமும்,    குணமும்
உடையவனை அவையேயாகவும், காலத்தின்கண்  ஒற்றித்து நிற்பவனை,
‘காலம்’  எனவும்  கூறியவை, பான்மை  வழக்கு ‘‘கோலமே’’ முதலிய
மூன்றாலும்   உலகின்   வேறுபட்ட   தன்மையைக்   கூறியவாற்றால்,
அத்தன்மையானே     யாவர்க்கும்      முதல்வனாதலைக்   குறிக்க,
‘‘மேலைவானவர்   கோவே’’   என்றார்.   இது  ‘‘காலமே’’ என்றதன்
பின்னர்க்   கூட்டியுரைக்கற்பாலது.  ‘அமுதாக’  எனவும்,  ‘கோயிலாக’
எனவும் ஆக்கச் சொற்கள் வருவிக்க. ஞாலமே-உலகத்தில்  அதுவாய்க்
கலந்து   நிற்பவனே.  ‘தமியேன்  தவம்’  என   இயையும்.  நற்றவம்,
சரியைகிரியா யோகங்கள். தவத்தாயை - தவத்தின் பயனாய்க் கிடைத்த
உன்னை. நணுகுதல்-சார்தல்.  


மேல்