சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

11. திருமுகத்தலை


114.கன்னகா உள்ளக் கள்வனேன் நின்கண்
   கசிவிலேன் கண்ணின்நீர் சொரியேன்
முன்னகா வொழியேன் ஆயினும் செழுநீர்
   முகத்தலை யகத்தமர்ந் துறையும்
பன்னகா பரணா ! பவளவாய் மணியே !
   பாவியேன் ஆவியுள் புகுந்த
தென்னகா ரணம்நீ ஏழைநா யடியேற்
   கெளிமையோ பெருமையா வதுவே.              (3)
 

114. ‘கல் உள்ளம்’ என இயையும். நகுதல்-மகிழ்தல்; அஃது இங்கு
அன்பு   செய்தலைக்   குறித்தது.   இது   பொதுவாக   உள்ளத்தின்
இயற்கையைக் கூறியது, ‘நெகா உள்ளம்’ எனவும் பாடம் ஓதுப. ‘‘கசிவு’’
என்றது   அன்பினை,   ‘‘நின்கட்  கசிவிலேன்’’  என்றது,  சிறப்பாக
இறைவனிடத்து  அன்பு  செய்யாமையைக்  கூறியது  ‘‘ஒழி’’  என்றது,
துணிவுப்  பொருண்மை  யுணர்த்த,  ‘‘நகாவொழியேன்’’  என்றது ஒரு
சொல்தன்மைப்பட்டு  நின்று,  ‘நகமாட்டேன்’ எனப் பொருள்  தந்தது.
நகமாட்டாமையாவது,    மகிழ்ந்து    நின்று    பாடுதல்,   ஆடுதல்
முதலியவற்றைச்  செய்யாமை.  ‘‘ஆவி’’  என்றது, உயிரின் உணர்வை
உள்-உள்ளிடத்தில்  ஏழை-அறிவில்லாதவன். நாயடியேன்-நாய்போலும்
அடியேன்.   ஓகார  ஏகாரங்களை  மாற்றி,  ‘அடியேற்கு  எளிமையே
உனக்குப் பெருமையாவதோ’ என உரைக்க. ஏகாரம் தேற்றம்; ஓகாரம்
சிறப்பு. 


மேல்