3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
12. திரைலோக்கிய சுந்தரம்
132. | ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும் காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை பூரணத்தால் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம் சீரணைத்த பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. (11)திருச்சிற்றம்பலம் |
132. தேனைப் பருகி, மாலை சூடிவரும் செல்வரது இயல்பு பற்றித் தமது திருவருட் செல்வப் பேற்றை இவ்வாறு விளக்கினார். ‘யான் இவ்வாறிருக்கின்ற காரணத்தால் எனது இத்தமிழ்மாலையும் நிலைபெற்ற தமிழ்மாலையாயிற்று’ என்பதாம். இனி, இவ்வாசிரியர் காயகற்பம் பெற்றுப் பன்னாள் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுதலால், அதனையே குறித்து, ‘‘நிலைபெற்ற கருவூரன்’’ என்றார் என, இதனை, அவருக்கே அடையாக்கி உரைத்ததும் ஆம். இப்பொருட்கு, முதலடியிற் சொல்லப்பட்ட காரணம், இவர் நிலைபெற்றமைக்கு உரிய காரணமேயாம். ‘தமிழ்மாலை பகரவரும்’ என்பதும் பாடம். ‘இத் தமிழ்மாலையின் பாடல்பத்தினையும் காந்தாரப் பண்ணினால் பாடி இறைவனைப் போற்றுவோர் பூரணத்தாராவர்’ என்க. ‘பூரணத்தால்’ என்பது பாடம் அன்று. சீர் அணைத்த - அழகைத் தன்னிடத்தே கொண்ட. |