4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
19. கோயில்
186. | கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன் அடியார் அமர்உலகம் ஆளநீ ஆளாதே முடியாமுத் தீவேள்வி மூவா யிரவரொடும் குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக்கூத் தாடினையே. (2) |
186. கடிஆர்-விளக்கம் (புகழ்) பொருந்திய, ‘உன்றன்’ என்னாது, ‘உன்’ என்றே ஓதுதல் பாடம் ஆகாது என்க. ‘அமரர் உலகம்’ என்பது குறைந்துநின்றது. ‘அமருலகம் என்பதனை முதலிற் கூட்டுக. ‘‘அடியார் ஆள நீ ஆளாது’’ என்றது, ‘அதன்கண் விருப்பம் இன்மையால் விடுத்தாய்’ என்னும் குறிப்பினது. இன்னும், அடியார் பலரையும் அமருலகம் ஏற்றுதல் தில்லையிலிருந்தேயாம் என்பதும் கருத்து. பின்னர் நாவுக்கரசர் முதலிய மூவர் முதலிகளுக்கு அருள்புரிந்தமையை எடுத்தோதுவதும் இக்கருத்துப் பற்றியே என்க. முடியா-என்றும் வளர்கின்ற, ‘‘குடிவாழ்க்கை கொண்டு’’ என்றது. ‘அவருள் ஒருவனாய்’ என்றபடி. குலாவி-மகிழ்ந்து. |