5. கண்டராதித்தர் திருவிசைப்பா
20. கோயில்
197. | முத்தீ யாளர் நான்ம றையர் மூவா யிரவர்நின்னோ டொத்தே வாழுந் தன்மை யாளர் ஓதிய நான்மறையைத் தெத்தே யென்று வண்டு பாடுந் தென்றில்லை யம்பலத்துள் அத்தாவுன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ ! (3) |
197. ‘இரணிய வன்மன்’ என்னும் அரசன், வியாக்கிரபாத முனிவருடைய கட்டளையின்படியே, ‘கங்கை யமுனை’ என்னும் இருநதிகளின் இடையேயிருந்த முனிவர் மூவாயிரவரைத் தில்லைக்கு அழைத்து வந்து எண்ணிக்காட்டிய பொழுது, ஒருவர் குறைய அவன் திகைத்து வருந்துதலும், தில்லைக் கூத்தப்பெருமான், ‘இவர்கள் எம்மையொப்பார்கள்; நாமும் அவர்களை யொப்போம்; நாம் அவர்களில் ஒருவரானோம்; வருந்தற்க’ என்று அருளிச்செய்தார் என்பது தில்லை மூவாயிரவரைப்பற்றிய வரலாறு ஆதலின், அவரை, ‘‘நின்னோடு ஒத்தே வாழும் தன்மையாளர்’’ என்றார். இவ்வரலாற்றைக் கோயிற் புராணத்தால் அறிக. ‘தில்லைவாழந்தணர் ஓதுகின்ற நான்கு வேதங்களை வண்டுகள் பாடும்’ என்றவாறு. |