8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
26. கோயில்
258. | ஆவியின் பரம்என்றன் ஆதரவும் அருவினை யேனைவிட் டம்ம அம்ம பாவிவன் மனம்இது பைய வேபோய்ப் பனிமதிச் சடையரன் பாலதாலோ நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும் நெஞ்சமும் தஞ்சமி லாமை யாலே ஆவியின் வருத்தமி தார்அறிவார் அம்பலத் தருநடம் ஆடு வானே. (2) |
258. இரக்கத்தின்கண் வந்த ‘அம்ம’ என்பது அடுக்கி நின்றது. பாவி மனம்-கொடுஞ் செயலை உடையதாகிய மனம். ‘இதுவும் என்ற எச்ச உம்மை விரிக்க. ஆல், ஓ அசை நிலைகள். நீவி-நீக்கம்; தனிமை; மேகலை என்று கொண்டு, ‘நீவியின் நெகிழ்ச்சியும்’ என்பது பாடம் என்பாரும் உளர். நெகிழ்ச்சி-தளர்ச்சி; மெலிவு. ‘‘நெஞ்சமும் தஞ்சம் இலாமையாலே’’ என்றதனை, ‘‘அரன் பாலதாலோ’’ என்றதன் பின்னர்க் கூட்டுக. ‘நீவி முதலியனவாகிய இவ் ஆவியின் வருத்தம்’ எனச் சுட்டு வருவித்து உரைக்க. ‘நடமாடுவானே அறியும்’ என ஒருசொல் வருவித்து முடிக்க. அல்லாக்கால் ‘‘அரன்’’ என்றதனோடு இயையுமாறில்லை. ‘‘போய்’’ என்பது முன்னிலைக்கண் செல்லாதாகலின், ‘சடைய நின்பாலதாலோ’ எனப் பாடம் ஓதலும் ஆகாது. இத்திருப்பாட்டிலும், வருந்திருப்பாட்டிலும், ‘அருள்நடம்’ எனப் பாடம் ஓதுவாரும் உளர். |