சேந்தனார் திருப்பல்லாண்டு
29. கோயில்
300. | ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. (12) |
300. ‘யார் யார்’ என்பது, ‘‘ஆர் ஆர்’’ என மருவி நின்றது. திருவாதிரை நாள் தில்லைப் பெருமானுக்குத் தனிப் பெருந் திருநாளாதலின், அதனையே எடுத்துக்கூறினார். இத் திருப்பதிகம் அந்நாளில் இவரது அன்பினை வெளிப்படுத்துதற் பொருட்டு ஓடாது நின்ற தேரினை இத்திருப்பதிகம் பாடி ஓடச்செய்தார் என்பது மரபு. தில்லைத் தேர்த் திருவிழா இஞ்ஞான்று திருவாதிரைக்கு முன்னாளில் செய்யப்படுகின்றது. அணி-அழகு. ‘ஆதிரை நாளில் அமரர் குழாத்தில் ஆரார் வந்தார்’ என்க. ‘வந்தார்’’ என்றதன்பின், ‘எனின்’ என்னும் சொல்லெச்சம் வருவிக்க. இனி அவ்வாறு வருவியாது. கூற்றும், மாற்றமுமாக நின்றாங்கு நிற்ப உரைப்பினும் ஆம். ‘இந்திர |
னும்’’ என்றதன்பின் ‘வந்தார்’ என்னும் பயனிலை எஞ்சி நின்றது. ‘அரசன் வந்தான்’ என்றவழி, அமைச்சர் முதலாயினார் வந்தமை தானே பெறப்படுதல்போல. ‘நாராயணன் முதலியோர் வந்தார்’ எனவே, ஏனைத் தேவர் பலரும் வந்தமை சொல்லாமே அமைந்தது. பெரியோனது தனிப்பெருவிழாவாகலின், அமரர் அனைவரும் எஞ்சாது வருவாராயினர். ‘‘தேரார் வீதியில்’’ என்பதன்முன், ‘இவ்வாறு’ என்னும் இயைபுபடுத்தும் சொல் வருவிக்க. ‘‘தேரார் வீதி’’ என்றதனால், ஆதிரைநாளில் வீதியில் தேரோடிய குறிப்பு அறியப்படும். ‘‘நிறைந்து’’ என்றதனை, ‘நிறைய’ எனத் திரிக்க. நிறைய-நிறைந்து நிற்க. பார் ஆர்-நிலவுலகெங்கும் நிறைந்த. தொல் புகழ்-பழைமையான புகழ்; இது சிவபிரானுடையது. ஆடியும்-அப்பாடலுக்கு ஏற்ப ஆடுதலைச் செய்தும். ‘‘ஆதிரைநாள்’’ என்றமையின், அந்நாளை யுடையானுக்குப் பல்லாண்டு கூறுதும்’ என்க. |