சொல்லகராதிச் சுருக்கம்

சேந்தனார் திருப்பல்லாண்டு

29. கோயில்


301. 

எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு
   தாம்மெம் பிரான்என்றென்று
சிந்தை செய்யும் சிவன் சீரடியார்
   அடிநாய் செப்புரை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்
   தாண்டுகொண் டாருயிர்மேற்
பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று
   பல்லாண்டு கூறுதுமே.                       (13)

திருச்சிற்றம்பலம்
 


301.     ‘எம் தந்தை, எம் தாய், (எம்) சுற்றம், (மற்றும்)  எல்லாப்
பொருளும்   எமக்குச்  சிவபிரானே  என்றென்று  சிந்தை   செய்யும்
சீரடியார்’   என   உரைக்க.   அமுதாம்   எம்பிரான்-அமுதம்போல
இனிக்கின்ற  எங்கள்  பெருமான்;  ‘சிவபிரான் என்றபடி. முதலடியின்
இறுதிச்சீரின்  ஈற்றசை நேர்பு.  நேர்பசை   நிரைபசை  கொள்ளாதார்
இச்சீரினை, ‘நாலசைச் சீர்’ என்ப. ‘என்றுமே’ என  ஓதி, எழுசீராகவும்
ஆக்குப.   இத்திருப்பாட்டின்   இரண்டாவதும்,  மூன்றாவதும் ஆகிய
அடிகளில் உள்ள பாடங்கள் உண்மைப் பாடங்களாகத் தோன்றவில்லை.
பாடபேதங்களும்  பலவாகச் சொல்லப்படுகின்றன. எனவே, இரண்டாம்
அடியில்,  ‘‘நாய்’’  என்றதன்பின்  ‘சேந்தன்’ என்னும் சொல் அமைய
ஓதுதல்  பாடமாகக்  கொண்டு,  மூன்றாமடியில், ‘அந்தமில் ஆனந்தச்
செந்தேன்  எனப்புகுந்து’  எனக்  காட்டப்படும் பாடத்தை உண்மைப்
பாடமாகக்  கொள்ளுதல்  பொருந்துவதாம்.  ஆயினும், இது பொழுது
ஓதப்பட்டுவரும் பாடமே இங்குக் கொள்ளப்படுகின்றது. சீரடியார் அடி
நாய்-சிறப்புடைய   அடியவரது   அடிக்கீழ்நிற்கும்  நாய்போன்றவன்.
என்றது,  தம்மைப்  பிறர்போலக் கூறியதாம். ‘செப்புரையால் கூறுதும்’
என மூன்றாவது விரித்து முடிக்க. ஆனந்தச் சேந்தன்- ஆனந்தத்தைப்
பெற்ற சேந்தன். இஃது, ஆளப்பட்டபின்னர் அடைந்த  நிலைமையைக்
கூறியது.  ஆருயிர்மேற்  பந்தம்-அரிய  உயிரின்மேல்  நிற்கும் கட்டு.
பிரிய-நீங்குமாறு. பரிந்தவன்-அருள் செய்தவன்.


மேல்