சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

5. திருவீழிமிழலை


54.

எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்,
   எண்ணில்பல் கோடிதிண் டோள்கள்,
எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்
   ஏர்கொள்முக் கணமுகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி எல்லைக்கப் பாலாய்
   நின்றைஞ்ஞூற் றந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி
   இவர்நம்மை ஆளுடை யாரே.                  (9)
 

54.     ‘‘எண்ணில் பல் கோடி’’ என்றது, ‘அளவிறந்த’ என்றவாறு.
சேவடி  முதலியவற்றை,  ‘அளவிறந்தன’  என்றல்  எங்கும்  நிறைந்து
நிற்கும் நிலையைக் குறிப்பதாம். 

‘‘ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோள்உடையானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள்முடி யானும்
ஆயிரம் பேர்உகந் தானும் ஆரூர் அமர்ந்தஅம் மானே’’.
                               (திருமுறை 4. 4. 8)
  

என்று    அருளியது   காண்க. முகம் உள்ள இடம் எல்லாம் முக்கண்
உள்ளமையின்,  ‘‘எண்ணில்  பல்கோடி முக்கண்’’  என்பதும் கூறினார்.
‘‘இயல்பு’’  என்றது, செயலை எண்ணில் பல்கோடி குணம், ஒருவராலும்
அளவிட்டறிய    ஒண்ணாத   தன்மைகள்.   சடமும்,    சித்துமாகிய
பொருள்கள்தாம்  பலவாகலின்  அவற்றின்  எல்லைகளும்  பலவாதல்
பற்றி,  அவையனைத்தையும்  கடந்து நிற்றலை, ‘‘ எண்ணில் பல்கோடி
எல்லைக்கப்பாலாய்  நின்று’  ன்றார். தில்லையில் மூவாயிரவர்போலத்
திருவீழிமிழலையில்  உள்ள அந்தணர் ஐஞ்ஞூற்றுவர்  என்க. ‘‘இவர்’’
என்றது,    ’இத்தகு     மேலோர்’    என்னும்   பொருட்டு.  ஆள்
உடையார்-ஆளாக உடையவர். ஆதலின் எமக்கென்ன குறை’ என்பது
குறிப்பெச்சம்.


மேல்