சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

6. திருவாவடுதுறை


62.

திலக நுதல்உமை நங்கைக்கும்
   திருவா வடுதுறை நம்பிக்கும்
குலக அடியவர்க் கென்னையாட்
   கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல்
அலதொன் றறிகின்றி லேமெனும்
   அணியும்வெண் ணிறஞ் செழுத்தலால்
வலதொன் றிலள்இதற் கென்செய்கேன்
   வயல்அந்தண் சாந்தையர் வேந்தனே.            (5)
 

62. ‘குலம்’ என்பது ககரம் பெற்று, “குலகம்” என வந்தது; ‘கூட்டம்’
என்பது  பொருள்.  அம்மையை வேறு கூறியது, 'அவளோடு உடனாய்
நின்று  காட்சி வழங்கும் அவன்’ என்பது உணர்த்துதற்கு. கொடுத்து -
கொடுத்தமையால்,  “வெண்ணீறு”  என்றதற்கு,  ‘அதனைப்  பூசுதலும்’
எனவும்,   “அஞ்செழுத்து”   என்றதற்கு.  ‘அதனைச்  சொல்லுதலும்’
எனவும் உரைக்க. “வேந்தன்” என்றது, சிவபிரானை.


மேல்