106. ‘‘தோழி’’ இரண்டனுள் முன்னது விளி ;பின்னது, ‘தோழியாகிய நீ’ என இருபெயரொட்டின்கண் வந்தது. ‘தோழி, இரவு நீ துணையாய் நிற்கப் போம் ; அதனால், மாலையம் பொழுதில் ஆழியும், திரையும் அலமருமாறு கண்டு அயர்வன் ; மணியம்பலவவோ என்று மயங்குவன் ; இதற்கு என் செய்கோம்’ எனக் கூட்டி யுரைக்க. முன்னர்த் தனது நிலையைக் கூறிப் பின், இருவரையும் சுட்டி, ‘என்செய்கோம்’ என்றாளாதலின், பால்வழுவின்மை அறிக. ‘இன்று இரவு தனிமையிற் கழிந்ததாயினும், நாளைக் காலை வந்து ‘அஞ்சேல்’ என்று அளிப்பான்’ என்று ஒவ்வோர் இரவிலும் கருதுகின்றவள். ஒரு நாளும் அவன் அங்ஙனம் வரக்காணாமையால், ‘‘பகல் வருமாகில் ‘‘அஞ்சலோ என்னான்’’ என்றாள். அஞ்சலோ என்னான் என்றது, ‘அஞ்சல் என்று சொல்வதோ செய்யான்’ எனப் பொருள் தந்து நின்றது. அன்றி, ஓகாரம் அசையெனினும் ஆம். ‘அஞ்சலோம்பு’ என்பதே பாடம் போலும். ஆழி-கடல். திரை - அலை. அலமருதல்-அலைதல். அலமருவது திரையன்றி ஆழியன்றாயினும், அஃது அதனைத் தாங்கி உடன் நிற்றல்பற்றி அதனையும் அலமருவதாகக் கூறினாள். தனக்குத் துயர் செய்பவை தாமம் துயர்ப்படுவதைக் கண்டு மகிழ்கின்றாளாதலின், ‘அலமருமாறு கண்டு’ என்றாள், இதனால், கண் துயிலாமை விளங்கிற்று. அவை துயர்ப்படினும் தன் துயர் நீங்காமை பற்றி, ‘அயர்வன்’ என்றாள், கிஞ்சுகம்-முள்முருக்கம் பூ. மஞ்சு அணி அம்பலம்-மேகங்களை மேலே கொண்ட மேற்கட்டியை யுடைய அம்பலம். ஓகாரம், முறையீடு குறித்தது. |