சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

14. திருப்பூவணம்


149. 


  

செம்மனக் கிழவோர் அன்பு தாஎன்றுன்
   சேவடி பார்த்திருந் தலச
எம்மனம் குடிகொண் டிருப்பதற் கியான்ஆர் ?
   என்னுடை அடிமைதான் யாதே ?
அம்மனங் குளிர்நாட் பலிக்கெழுந் தருள
   அரிவையர் அவிழ்குழற் சுரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே.               (6)
 

149.   கிழவோர்-உரியவர்  ; அடியார்.   ‘கிழவோர  அலச’ என
இயையும்.     ‘‘அன்பு’’     என்றது      இறைவனது     அருளை.
பார்த்திருந்து   - தோன்றுதலை    எதிர்நோக்கியிருந்து. அலச-வருந்த,
‘அவர்களிடம்   செல்லாமல்   என்பால்   வந்து  என்  மனத்தில்  நீ
குடிகொண்ட  இந்நிலைக்கு  நான்  என்ன   தகுதியுடையேன் ! எனது
தொண்டுதான்  என்ன தகுதியுடையது’ என்றபடி.   அம் மனம்-அழகிய
மனம் ; அடியவர் மனம். குளிர்நாள்- மகிழ்வதற்கு   அமைந்த நாளில்.
சிவபெருமானது    விழாக்களில்    அவன்    பலிக்கு    (பிச்சைக்கு)
எழுந்தருளும்   விழாவும்   ஒன்றாதல்  அறிக.  அரிவையரது   குழல்
அவிழ்தல்.     இறைவனைக்        காதலித்தமையாலாம்.     குழல்
சுரும்பு-கூந்தலில்  உள்ள  வண்டுகள்  ‘‘பொம்மென’’  என்றது. ஒலிக்
குறிப்பு.


மேல்