237. அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள்-அன்னம் போலும் நடையை உடையவரும், அமுதம்போலும் மொழியை உடையவரும் ஆகிய அவர்கள்; மகளிர். மகளிர் அழகும், பிற நலங்களும் உடையராய் இருத்தல் இல்லத்திற்கேயன்றி, ஊர்க்கும், நாட்டிற்கும் சிறப்பைத் தருவது என்க. தென்னன்-பாண்டியன், இவ்வொருமைப் பெயர் பாண்டியரது குடியின்மேல் நின்று அவர் அனைவரையும் குறிப்பதாயிற்று. தமிழ் நாட்டு மூவேந்தருள் சங்கம் நிறுவித் தமிழை வளர்த்தவர் பாண்டியராதலின், தமிழை அவர்க்குரியதாகக் கூறினார்.‘‘உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந் தமிழ்’’ என்றார் திருக்கோவை யாரினும் (20). இனி, ‘நற்றமிழ்’ என வருதலல்லது, ‘நன்றமிழ்’ என வருதல் வழக்கின்கண் இன்மையின், ‘தென்நன்தமிழ்’ எனல் ஆகாமை அறிக. ‘‘இசை’’ எனப் பின்னர் வருகின்றமையின், ‘‘தமிழ்’’ என்றது, இசைத் தமிழையாயிற்று. இயற்றமிழையும், இசைத்தமிழையும் கூறவே, இனம் பற்றி நாடகத் தமிழும் கொள்ளப்படுவதாம். ஆகவே, ‘முத்தமிழும் கலந்த சிற்றம்பலம்’ என்றதாயிற்று. கலந்த-பொருந்திய. நிரந்த தலம்-பரந்து பொருந்திய நிலம். பியற்கு-தோளில் ‘தலத்து, இட்டு, காண விகிர்தன் ஆடும்’ என்க. |